Followers

Sunday 25 March 2012

டி எம் எஸ்ஸின் 25 ஸ்பெஷல் விஷயங்கள்


டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்! 

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். 

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்! 

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததுஇல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது! 

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!

* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'

* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரைஉலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!

* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!

* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன! 

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. 

* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!
 
* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.

தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்

7 comments:

முத்தரசு said...

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

அரிய தகவல்கள். நன்றி.

கோவை நேரம் said...

அவ்ளோ தானா...?

சகாதேவன் said...

நீங்கள் சொன்ன தகவல்களுக்கு நன்றி.

டி.எம்.எஸ் பற்றிய என் பதிவைப் பாருங்களேன்.
vedivaal.blogspot.in/2009/04/blog-post_22.html

சகாதேவன்

unmaikal said...

TMS அவர்கள் ஒரு சில சிங்களப் பாடல்களும் பாடி உள்ளார். அவற்றின் original records இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தில் மட்டும் உண்டு. வேறு எங்கும் இவை இல்லை

நன்றி

karthik87 said...

அரிய தகவல்களுக்கு நன்றி.

அக் ஷயா said...

நீங்கள் சொன்ன தகவல்களுக்கு நன்றி நண்பரே

Post a Comment