Followers

Wednesday 28 December 2011

ராஜபாட்டை சினிமா விமர்சனம்



ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் அடக்கி வாசித்ததால் டபுள் ஆக்ஷன் வேண்டுமென்று படம் துவங்கியதிலிருந்து அப்படியே படம் மேலே போய், போய் அப்படியே தியேட்டர் கூரையை பிச்சிக்கிட்டு வெளியே போய் விட்டது. விக்ரமுக்கு இந்த படத்தின் தோல்வி அவரது கேரியரை பாதிக்காது என்பதால் அவரது ஹீரோயிச ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாவம் சுசீந்தரன். என்னடா ஒவர் பில்டப்பா இருக்கு கதைக்கு வருவோம் என்கிறீர்களா. ஒகே.

தமிழகமெங்கும் நில அபகரிப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் பின்புலமுள்ள கும்பல் விஸ்வநாத் அவர்களிடமிருந்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறது. விஸ்வநாத் விக்ரமிடம் தஞ்சமடைகிறார். பாதுகாப்பு கொடுக்கும் விக்ரமிடமிருந்து அசந்த நேரத்தில் கோயிலில் வைத்து நிலம் விஸ்வநாத்திற்கே தெரியாமல் கைமாறுகிறது. அதன் பிறகு விக்ரம் ஆக்சன் அவதாரமெடுத்து வில்லன்களிடமிருந்து நிலங்களை மீட்கிறார்.

அவ்வளவு தான் படத்தின் கதையை பற்றி சொல்ல முடியும். இந்த கதை 80களில் 100 படமாக வந்திருக்கும். 90களில் 50 படங்களும் அதன் பிறகு சில வருடங்களுக்கு ஒரு படமும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக ஜீவா நடித்த பொறி என்று நினைக்கிறேன். அதன் பிறகு அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ராஜபாட்டையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

விக்ரம் அவரது நடிப்பை பற்றி நாம் சொல்வது ஓவர். அவருக்கு அபிஷேக்பச்சனை விட நன்றாக நடிக்கத் தெரியும் என்பது ராவணன் படத்தை தமிழ், இந்தி இரண்டு வெர்ஷனும் பார்த்தவர்களுக்கு தெரியும். அதனால் அது வேண்டாம். அவரது விதவிதமாக கெட்டப் ஆசைகளை தீர்த்து விட்டிருக்கிறார். படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் ஒரு ஜிம்முடன் பயணித்திருப்பார்கள் போல .ஒவ்வொரு காட்சியிலும் அப்பொழுது தான் பெஞ்ச் பிரஸ் எடுத்து நிமிர்ந்தவர் போல விடைப்பாக தெரிகிறார்.

ஹீரோயின் தீக்ஷா சேத். வேஸ்ட் இரண்டு பாட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். ஆளும் ம்ஹூம், நாக்கு நச்சலேது. ஏதோ ஒக்கடி தக்குவா உந்தி. விஸ்வநாத் நடிகனாக தமிழில் சொல்லும்படியாக நிறைய காட்சிகளில் வருகிறார். காமெடி செய்கிறார். நல்ல பெர்பார்மன்ஸ்.

தம்பி ராமையாவுக்கு காமெடி ரோல் கொடுத்து விட்டிருக்கிறார்கள். முயற்சிக்கிறார். சிரிப்பு தான் வரவில்லை. அந்த அக்கா அதன் பதின்வயதில் எப்படியிருக்கும் நினைக்கும்போதே டென்சனாகிறது (உணர்ச்சியை அடக்குடா செந்திலு.. இப்ப அது ஆன்ட்டி) இப்பொழுதும் பாதி டென்சன் வரவைக்கிறார்.

இந்தபடத்துல வில்லாதி வில்லன் அப்படின்னு ஒரு பாட்டு வருது. அதுல ஒரு பொண்ணு டான்ஸ் ஆடுச்சு. இதை எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன், அதுலேயே பாதி பாட்டு போயிருச்சி. அப்பத்தான் என் மூளையில் ஒரு மின்னல் (செம மூளைப்பா எனக்கு...!) அந்த பொண்டு தெலுங்குல மரியாதராமண்ணா அப்படிங்கிற சூப்பர்ஹிட் படத்துல ஹீரோயின். அந்த படத்துல ஹீரோ சுனில், இயக்குனர் இதுவரை தோல்வியே பார்க்காத S.S. ராஜமெளலி. அப்படிப்பட்ட அந்த படத்துல மிக மரியாதையான கேரக்டருல நடிச்ச அந்த பொண்ணு இந்த படத்துடல அயிட்டம் சாங் ஆடுது. அதுக்கு என்ன பணத்தேவையோ, அந்த ஹோம்லியான லுக்ல பார்த்து ரசிச்ச எனக்குதான் மனசு கஷ்டமாயிருச்சி. நல்ல பொண்ணுங்களையெல்லாம் உரிச்ச கோழியாக்கிறானுங்கப்பா.

அக்காவாக வருவரின் பினாமியாக இருக்கிறார் ஒரு வாப்பா என்னும் முஸ்லீம். அவருக்காக நிலங்களை வாங்கி பதுக்கி வைக்கிறார். அவர் காவல்துறையினிடம் மாட்டிக் கொள்கிறார். அவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்ய ஆள்பவர்களால் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவத்தை நீங்கள் திமுக குடும்பத்துடனும் சாதிக் பாட்சாவுடனும் ஒப்பிட்டு கொண்டால் நான் பொறுப்பல்ல.

சுசீந்திரன் அது என்னவோ தெரியவில்லை. அவரது நாலு படத்தையும் முதல் நாள் முதல்காட்சி பார்த்து விடுகிறேன். ஆனால் மூன்று படங்களில் படம் முடிந்து வரும் போது நல்ல படத்தை பார்த்தோம் என்ற பெருமிதம் இருக்கும், ஆனால் இந்த படத்தில் அது இல்லை.

 விமர்சனம் ஓவர்,
தஞ்சை குமணன்

செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா _ ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 பிப்ரவரி 24_ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூர் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு, திரை உலகப் பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார். தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965_ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். அந்தப் படத்தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.

தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.   "வெண்ணிற ஆடை" படம் வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த "எபிசில்" (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், "இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்!" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971_ம் ஆண்டு காலமானார்.

தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா') ஜெயலலிதாவின் 100_வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார். 1980_ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982_ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார். ஜெயலலிதாவை, 1984_ல் ராஜ்யசபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை அனைவரையும் கவர்ந்தது.

எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதல்_அமைச்சர் ஆனபோதிலும், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். எனவே, ஜானகி அம்மாள் மந்திரிசபை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று முதல்_அமைச்சர் ஆனார். அதன் பிறகு நடந்தது எல்லாம் இந்த தலைமுறையினருக்கு தெரியும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்

Sunday 11 December 2011

ஆதாமின்டே மகன் அபு விமர்சனம்



அன்பார்ந்த வலைப்பூநண்பர்களுக்கு,

மிகச்சமீபத்தில் தான் ஆதாமின்டே மகன் அபு படத்தை பார்க்க நேர்ந்தது. மலையாளியை பிடிக்காமல் இருந்தாலும் இந்த படம் பிடிக்கிறது. முதல் முறையாக முயற்சிக்கின்றேன். படித்துப் பார்த்து குறையிருந்தால் சுட்டிக்காட்டவும்.


ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர்.


பாங்கு ஒலி கேட்டு நான்கு மணிக்கு எழுந்து ஸுபஹு’வுக்கு செல்ல கிணற்றடியில் குளித்துவிட்டு தொம்தொமென்று மரப்படிகளில் ஏறும் தம்பி அந்தோணிக்கு வாய்க்காதது , “இண்ணல ராத்திரி முழுவன் வயிற்றிலெ வாயு கிடன்னு களிக்குகயாணு” என்று காரும் வீடும் வைத்திருக்கும் டி.எஸ்.ராஜு [ ஹாஜி] க்கு கிடைக்காத வாய்ப்பு, அத்தனை பெரிய ட்ராவல்ஸ்ஸில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் முகேஷுக்கு கிடைக்காத வாய்ப்பு , வெறுமனே அத்தரும்,நறுமணப்பொருட்களும் விற்கும் நம் சலீமிற்கு [ அபு ] ஹஜ் செல்ல வாய்ப்புக்கிடைக்கும்போது நமக்கு உள்ளுர சந்தோஷம் ஏற்படுவது இயற்கை.”நாம நினைக்கும் போது கடவுளைக் காணச்செல்ல இயலாது, அது அவனாக நினைக்கும்போது மட்டுமே நடக்கும்” என்பது இதிலும் மெய்யாகிறது.


வெகு நாட்களாக வளர்த்து வந்த பலாமரமத்தை கலாபவன் மணியிடம் [ஜான்சன்] விற்கச்செல்வதும்,முன்பணம் வாங்கிக்கொண்டு பின் மிச்சத்தையும் வாங்கச்செல்லும்போது “மரம் எதற்கும் உதவாமல் உள்ளுக்குள் உளுத்துப் போய்விட்டது, இருந்தாலும் நான் சொன்ன விலையையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று ஜான்சன் சொல்வதும், இப்படி ஒரு சிதைந்த ஒன்றுக்கும் உதவாத மரத்தை விற்று அதில் ஹஜ்ஜுக்கு பயணிப்பதா என்று பணத்தை வாங்க மறுதலிக்கும் போது சலீமின் கதாபாத்திரம் நம்மை சிறிது அசைத்துப்பார்க்கிறது.


எங்கும் எதிலும் எப்போதாவது , அறிந்தோ அறியாமலோ தவறோ தீங்கோ இழைத்திருந்தால் பயணத்தில் தடை ஏற்படும் என உணர்ந்து, இரண்டு செண்ட் நிலத்திற்கென தன்னிடம் சண்டையிட்ட சுலைமானைச்சந்தித்து வரச் செல்வது,அங்கு சுலைமான் , இப்படி உங்களிடம் மன்னிப்பு கேட்க ஒரு சந்திப்பை ஏற்படுத்திக்கொடுக்கவே கடவுள் என்னை இன்னும் உயிருடன் விட்டு வைத்திருக்கிறான் என்று சுலைமான் சொல்வதும் அருமையான காட்சிகள்.


பயணத்தில் தடை ஏற்படுவது சகஜந்தான், அதுவும் முதியவர்களுக்கு இப்படி நேர்வது ஒன்றும் புதிதில்லை, பணப்பிரச்னையை நான் சமாளித்துக்கொள்கிறேன், நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்கன்னு சொல்லும் முகேஷ், மரம் உளுத்துப்போனால் என்ன விலை நிர்ணயித்தது நான் தான், அதனால ஒத்துக்கொண்ட பணத்தை குடுத்திர்றேன்னு சொல்லும் கலாபவன் மணி, பணக்குறைப்பாட்டால பயணம் நிற்க வேண்டாம்னு சொல்லி , கையில் பணத்துடன் வந்து சலீமின் வாசலில் வந்து நிற்கும் நெடுமுடி வேணு என்று எப்படி எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கின்றனர் படம் முழுக்க. ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது என்றால் தாமாகவே உதவிகளும் வீடு தேடி வருவது அனைவரின் வாழ்விலும் ஒரு முறையேனும் நிகழ்வது இயற்கை தானா ?


எவ்வளவோ முயற்சி செய்தாச்சு , இன்னும் கொஞ்சம்தான் கிடைக்கணும் ,அதுவும் முடிஞ்சுட்டா பயணம் சிறப்பா அமையும்னு நினைக்கும் போது ,வாசலில் கட்டியிருக்கும் பசு நானும் இருக்கேன் உங்களுக்கு உதவுவதற்கு என தன் குரலெழுப்பிக்காட்டும்போது நமக்கே இந்தப்பயணம் வெகுவாச்சாத்தியப்பட்டு விட்டது என்று நினைக்கத்தோணுகிறது. கடைசியாக பசுவில் கறந்த பாலை எடுத்துக்கொண்டு நெடுமுடி வேணு’வின் வீட்டிற்குச்சென்று அதைக்கொடுப்பதான காட்சி கலங்கடிக்கிறது.


என் ஊரில் அம்மா அதிகாலைல எழுந்து வாசல் தெளித்துகோலம் போடும்போது , கயத்துக்கடை சாகிபு [ முஸ்லீம் அவர் , கேரளாவிலருந்து தென்னங்கயிறுகள் வாங்கி மொத்த வியாபாரம் செய்பவர் ] வீட்டில வெச்சிருக்கிற பசு மாடுகள , அந்த நேரத்தில பால்பண்ணைக்கு கூட்டிட்டு போவாங்க அந்த சாகிபு வீட்டம்மா. அந்த காலை நேரத்தில பசுவினைக் காணுவது என்பது அம்மாவுக்கு லக்ஷ்மியவே பார்த்த மாதிரி,அத அவங்க ரெண்டு பேரோட கண்கள்லயும் அந்த மகிழ்ச்சிய நான் பார்த்திருக்கேன் பல தடவைகள், அந்த பழைய நிகழ்வை ஞாபகப்படுத்துவது போலருந்த இந்தக்காட்சிகள் எனக்குள் குளத்திலெறிந்த கல்லைப்போல அலைகளை உருவாக்கத்தவறவில்லை.


பிறகும் பணம் குறையும் போது , ஏங்க நம்ம பையன் சத்தார் கிட்ட கேட்டா என்ன என்று ஜரீனா கேட்கும் போது , அவன் எப்படி அத சம்பாதிக்கிறானோ , அந்தமாதிரி தவறான வழியில வர்ற பணத்த வெச்சு நாம பயணிக்கணும்னு அவசியமில்லை என்று மறுப்பதும் நமக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்கத்தவறவில்லை.


Passport வாங்கிக்கொள்ள PostOffice திறக்குமுன்னரே அதன் வாயிலில் போய்க்கிடப்பது,”ச்செல நேரத்துக்கு நிங்களுக்கு சிறிய குட்டிகளுடே சுபாவா(ம்) “ [ சில நேரங்களில் நீங்கள் சின்னப்பிள்ளைகள் போலத்தான் நடந்துக்குவீங்க] என்று ஜரீனா சலீமை செல்லமாகக்கடிந்து கொள்வது ,பிறகு வாங்கிக்கொண்டு வந்த Passport-ஐ தன் மனைவி கையால் தொட்டுவிட்டால் அழுக்காகிவிடும் என்று சலீம் தன் கையில் வைத்துக்கொண்டே காண்பிப்பது,இருந்தாலும் பாஸ்போர்ட் போட்டோவில நீ அழகாத்தானிருக்கிற என்று சொல்லும் காட்சிகளில் தம்பதியினரின் நெருக்கம் ஒரு கவிதை.


“இறந்துபோன என்னோட அம்மா,அப்பாவ ஹஜ்ஜுக்கு அனுப்பறதா நினைச்சுக்கிறேன்னு சொல்ற பிள்ளைக்கு ,நூறு முறை ஹஜ் சென்று வந்ததற்கான புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி பணத்தினை வாங்க மறுப்பதும், உறவினர் தவிர வேறு யாரிடமும் பணம் வாங்குவதோ, கடனாகப்பெற்று செல்வதோ ஆகாது என்று சொல்லி பணத்தை வாங்க மறுப்பதும் , உளுத்த மரத்தினை விற்று உனது நம்பிக்கையை தகர்த்து அதில் கிடைக்கும் பணம் வேண்டாம் என்று அந்தப்பணத்தினையும் மறுப்பதும், அவ்வளவு காசிருந்தா நாங்க குடிச்ச டீக்கும் சேர்த்து குடுக்கவேண்டியது தானே என்று ஏளனம் பேசுபவர்களுக்கும் சேர்த்து காசு கொடுப்பதும்” என சலீம் அத்தனை காட்சிகளிலும் மிளிர்கிறார்.


கடைசிக்காட்சிகளில் பஸ்ஸில் பயணிக்கையில் ,சலீம் மயங்கி விழுவது போன்ற காட்சி படம் அங்கேயே முடிந்து விட்டது போன்ற உணர்வைத்தருவதைத்தவிர்க்க இயலவில்லை.மத நல்லிணக்கத்தைக் காட்டிவிடவேண்டும் என்று நெடுமுடி வேணுவை ஹிந்துவாகவும், கலாபவன் மணியை கிறீஸ்ட்டீனாகவும் வைத்து அவர்களை சலீமின் பயணத்திற்கு உதவுவது போலக்காட்டியிருப்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.


இஸ்லாமியப்படத்திற்கான பின்னணி இசைக்கென வழக்கமாக நாம் இதுநாள் வரை கேட்டுக்கொண்டிருக்கும் ஷெனாய், மற்றும், மாண்டலின் போன்ற கருவிகளைக்கொண்ட இசையையும் , கூடவே நமது மண்ணின் வாத்தியங்களான புல்லாங்குழல் மற்றும் தபேலாவையும் கூடவே பயன்படுத்தியிருப்பது சிறப்பு. ஐசக் தாமஸ் கோட்டுக்காப்பள்ளி , இவர் பாலுமகேந்திரா’வின் ‘கதை நேரம்’ என்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள் கொண்ட தொலைக்காட்சித் தொடருக்கான பின்னணி இசையை அளித்தவர். சலீம் பணத்தை எண்ணும் காட்சிகளில் சந்தூர், புல்லாங்குழல் மற்றும் மற்றும் தபேலா கொண்டு இவர் இசைத்திருக்கும் சிறிய இசைக்கோவை ஒரு மகிழ்வை சலீமோடு சேர்த்து நமக்குள்ளும் உண்டாக்கத் தவறவில்லை.


குறைகள் என்று சொல்ல வேண்டுமென்றால் பாடல்கள் வருவதை சொல்லலாம். பாடல் காட்சிகளினூடே படத்தை நகர்த்தி செல்வது என்பது சாதாரண வணிகப்படங்களை ஞாபகப்படுத்துகிறது. Passport Verification க்காக Police Station செல்லும்போது , அந்த இன்ஸ்பெக்டர், சலீமை “ஆதாமிண்டே மகன் அபு “ என்று படத்தின் பெயரை சொல்லி அழைப்பது, அதுவும் இரண்டு முறை சொல்வது, பிறகு அதையே சலீமும் சொல்லிக்கொண்டே அவருக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகளில் சாதாரண வணிகப்படங்களின் சாயல் தெரிவது என்பன போன்றவைகளை குறைகளாகச்சொல்லலாம். எதிர்த்தவர்கள் பின் திருந்தி உதவுவதும், நண்பர்கள் அனைவரும் சலீமிற்கு உதவுவதற்கெனவே இருப்பது போலவும் காட்டியிருப்பது , போன்ற காட்சிகள் , இந்தப்படத்தை வெளிநாட்டுப்பட வரிசை’க்கான ஆஸ்கார் விருதைப்பெற வரிசையில் சற்றுப் பின்னே தள்ளும் என்பதில் ஐயமில்லை.


எதிர்ப்பாராத இடங்களிலிருந்தும் , எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் உதவி கிடைத்தும்,பயணம் ஏன் தடைப்படுகிறது என்று யோசித்து இன்னமும் ஏதோ குறை இருப்பதை என்பதை எண்ணி , ஒரு உயிர் வாழும் ஜீவனை வெட்டி வீழ்த்தி அதை விற்ற காசில் பயணிக்க நினைப்பதே குறை என்றுணர்ந்து மரக்கன்றை ஊன்றி நீருற்றுவதில் அடுத்த முறை பயணிப்பதற்கான நம்பிக்கை சலீமிற்கும் ,நமக்கும் உறுதிப்படுத்தப்படுகிறது.


தஞ்சை குமணன்

Saturday 10 December 2011

வலைப்பதிவில் அறிமுகம்


அன்பார்ந்த வலைப்பூ பதிவர்களே

வணக்கம். எனது பெயர் குமணன். நான் ஆடிட்டர் அசிஸ்டெண்டாக சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறேன். எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இன்று முதல் வலைப்பூவில் எழுதத் துவங்குகிறேன். நன்றி

தஞ்சை குமணன்