Followers

Wednesday, 28 December 2011

செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா _ ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 பிப்ரவரி 24_ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூர் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு, திரை உலகப் பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார். தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965_ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். அந்தப் படத்தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.

தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.   "வெண்ணிற ஆடை" படம் வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த "எபிசில்" (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், "இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்!" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971_ம் ஆண்டு காலமானார்.

தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா') ஜெயலலிதாவின் 100_வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார். 1980_ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982_ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார். ஜெயலலிதாவை, 1984_ல் ராஜ்யசபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை அனைவரையும் கவர்ந்தது.

எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதல்_அமைச்சர் ஆனபோதிலும், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். எனவே, ஜானகி அம்மாள் மந்திரிசபை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று முதல்_அமைச்சர் ஆனார். அதன் பிறகு நடந்தது எல்லாம் இந்த தலைமுறையினருக்கு தெரியும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்

7 comments:

black said...

தொண்டர்கள் ஜெயலலிதா ஒன்றுபட்ட பொறுப்பு

vivek said...

ஜெயலலிதா பேசிய பேச்சுகள் எல்லாம் இந்த தலைமுறையினருக்கும் தெரியும்... வாழ்த்துக்கள் நண்பா....

தஞ்சை குமணன் said...

///vivek said...
ஜெயலலிதா பேசிய பேச்சுகள் எல்லாம் இந்த தலைமுறையினருக்கும் தெரியும்... வாழ்த்துக்கள் நண்பா...///
ஒன்றுபட்ட பொறுப்பு thanks நண்பா.

தஞ்சை குமணன் said...

///black said...
தொண்டர்கள் ஜெயலலிதா ஒன்றுபட்ட பொறுப்பு///
thanks நண்பா.....

sharbu007 said...

வாழ்க்கை வரலாறு thanks நண்பா

sankar said...

வாழ்க்கை வரலாறு இனிமை

karthik87 said...

வாழ்க்கை வரலாறு வாழ்த்துக்கள் நண்பா.

Post a Comment