Followers

Saturday 21 January 2012

சுபாஷ் சந்திர போஸின் ராணுவ நடவடிக்கைகள்


இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின.

பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு, "இந்திய தேசிய ராணுவம்" அமைக்கப்பட்டது. போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். "இது ஆபத்தானது" என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8_ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர். எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக் கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது.

ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை, மே 6_ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது. சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய விžகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, "தேசிய மாணவர் படை"யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது. 1943 அக்டோபர் மாதம், "சுதந்திர இந்திய அரசாங்க"த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார்.

பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக "பாங்கி" தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. "இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். "ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்" என்று நேதாஜி கூறியதும், "இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்" என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் "ஆசாத் ஹிந்த் பாங்க்" தொடங்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர்.

நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர். பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், "ஜான்சிராணிப்படை" என்ற பெயரில் இயங்கியது.

இதில் 1,200 பெண்கள் இருந்தனர். "தற்கொலைப்படை" ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

"டெல்லி சலோ!" என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. "ஜான்சிராணிப்படை" பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. "விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்" என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பிறகு நடந்தே வேறு. அது எல்லோருக்கும் தெரியும்.

தஞ்சை குமணன்

8 comments:

vivek said...

we all remember once again the legend

Thangavel Manickam said...

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவப் படையில் வீரராக பணிபுரிந்தார். பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் கிடந்தார்.பின்னாட்களில் அவர் கொண்டு வந்த காக்கிச் சட்டையைப் போட்டுக் கொண்டு என் சிறுவயதில் சந்தோஷமடைந்திருக்கிறேன். நேதாஜி எவருக்கு ஈடு இணையே இல்லாத சுதந்திரப் போராட்ட வீரர் என்றுச் சொல்லுவார் என் தாத்தா.

தஞ்சை குமணன் said...

/// கோவை எம் தங்கவேல் said...
எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவப் படையில் வீரராக பணிபுரிந்தார். பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் கிடந்தார்.பின்னாட்களில் அவர் கொண்டு வந்த காக்கிச் சட்டையைப் போட்டுக் கொண்டு என் சிறுவயதில் சந்தோஷமடைந்திருக்கிறேன். நேதாஜி எவருக்கு ஈடு இணையே இல்லாத சுதந்திரப் போராட்ட வீரர் என்றுச் சொல்லுவார் என் தாத்தா. ///

தகவலுக்கு நன்றி தங்கவேல்.

முத்தரசு said...

நேதாஜி தி கிரேட்

தஞ்சை குமணன் said...

///vivek said...
we all remember once again the legend///
தகவலுக்கு நன்றி Mr.vivek

sharbu007 said...

சுதந்திரப் போராட்ட வீரர் தகவலுக்கு நன்றி குமணன்

sankar said...

தி கிரேட் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவ நன்றி குமணன்

karthik87 said...

நடவடிக்கைகள் தகவலுக்கு நன்றி குமணன்

Post a Comment