Followers

Tuesday 10 January 2012

சென்னையின் காலங்கள்


சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும்.

டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து வரை குறுகி வரும் குளிர் காலத்தில் பாதி நகரம் சரணம் ஐயப்பா விளிக்க ஆரம்பித்து கேரளா எக்ஸ்டென்ஷன் ஆகிவிடுவதால், நெற்றியில் சந்தனமும், மலையாள தாடியும், கழுத்தில் துளசி மாலையுமாகப் பாதி சென்னை முகம் மாறும். மீதி, சபா கேண்டீனில் கீரை வடை சாப்பிட காரில் வந்து இறங்கும் மேட்டுக்குடி மூஞ்சியில் பிய்த்தது. ஈரக் கையோடு உள்ளே போய் அருணா சாயிராம் கச்சேரியில் மராத்தி அபங்கில் உருகி திரும்ப வெளியே வந்து சபா கழிவறை மூத்திர வாடையும் காதில் விழும் மீதிப் பாட்டுமாக அடை அவியலை அதம் செய்ய வாயைத் திறக்கும் அது.

சென்னையின் மழைக்கால முகம் வேறே மாதிரி. சுரணை குறைந்து மரத்துப் போன உடம்பும், மனசுமாக, தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கால் அமுங்க கையில் லெதர் பையில் வைத்த காலி லஞ்ச் டப்பாவோடு நடக்கிறவனின் முகம் அது. சேறும் சகதியும் பள்ளமும் மேடும், கடந்து கலங்கிய நீரை மேலே எறிந்து விட்டு சீறிப் பாய்கிற கார்களைக் கவனிக்காமல் செல்போனில் பேசிச் சிரித்தபடி நகர்கிற, ஈர சல்வார் காலோடு ஒட்டிய இளம் பெண்ணின் முகம் அது.

வெட்டி வைத்த சாக்கடைப் பள்ளத்தில் தலை குப்புற வீழ்ந்து, நெட்டுக் குத்தலாக அதில் பயிர் செய்த இரும்புக் கம்பிகளில் ஒரு பத்து இருபதாவது ஒரே நேரத்தில் கழுவேற்ற பரிதாபமாக மரித்த அந்த இளம் பெண்ணின் குழந்தைத்தனம் மாறாத முகமாக சென்னையின் மழைக்கால முகம் போன வாரம் பத்திரிகைகளில் பயமுறுத்தியது.

உடனே அது மறக்கப்பட்டு, மழை நின்ற சென்னையின் முகம் டெண்டுல்கரின் நூறாவது செஞ்சுரிக்காக ஆவலோடு காத்திருக்கப் பார்வையில் படுகிறது. டெண்டுல்கர் இன்னும் ஒரு நூறு செஞ்சுரி அடிக்கட்டும். சாக்கடைக் குழாய்ப் பள்ளத்தில் யாரும் எப்போதும் விழாத சந்தோஷத்தில் சென்னை சந்தோஷமாகச் சிரித்தபடி அதை வரவேற்கட்டும்.

தஞ்சை குமணன்

10 comments:

Anonymous said...

ஆமாங்க இதெல்லாம் உண்மை தான்.

ப.கந்தசாமி said...

வர்ணனை நன்றாக இருக்கிறது.

Thangabalu said...

உங்களின் எழுத்துதிறன் அருமையாக இருக்கிறது. என்னால் இப்படி எழுத முடியவில்லையே என்று பொறாமைப் படவைக்கிறது.!!

black said...

தமிழ் உலகில் கரும்பு ஏற்கனவே சில நாட்களாக அருமையே

vivek said...

சென்னையின் அருமை!...... இன்னும் நூறு செஞ்சுரி பயமுறுத்தும் ha ha ha...

தஞ்சை குமணன் said...

///vivek said...
சென்னையின் அருமை!...... இன்னும் நூறு செஞ்சுரி பயமுறுத்தும் ha ha ha..///
ஆமாங்க hi hi hi

தஞ்சை குமணன் said...

///black said...
தமிழ் உலகில் கரும்பு ஏற்கனவே சில நாட்களாக அருமையே///
சென்னையின் அருமை!......Thank you Mr.black...

sharbu007 said...

சென்னையின் காலங்கள் முடியவில்லையே என்று பொறாமைப் படவைக்கிறது.!!

sankar said...

வியர்த்து விறுவிறுத்தது சில நாட்களாக சென்னையின் அருமை காலங்கள்!,

karthik87 said...

காலங்கள் அருமை!.

Post a Comment